பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை திரைப்படம் ஆகிறது: பா.ரஞ்சித் தகவல்
கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
‘அட்டைகத்தி’ படத்தின் மூலம் தனி முத்திரை பதித்த இயக்குனர் ஆனார் பா.ரஞ்சித். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘மெட்ராஸ்’ படம் இயக்கினார். பின்னர், ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ‘கபாலி’ பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் ரஜினி அவருக்கு வாய்ப்பளித்தார். அவ்வகையில் உருவான ‘காலா’ படமும் வரவேற்பு பெற்றது.
அடுத்ததாக, புதிய கதைக்களத்துடன் ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ என்கிற பாக்ஸிங் கதையம்ச படத்தை இயக்கினார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
பின்னர், நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் போன்ற படங்களை இயக்கினார் பா.இரஞ்சித். இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்விப் படங்களாகவே அமைந்தது. இந்நிலையில், பா.ரஞ்சித் தற்போது பயோபிக் படம் இயக்க தயாராகி வருகிறார். அதாவது, இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூ என்பவரின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளார்.
‘பலூவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராமச்சந்திர குஹா எழுதியுள்ள ‘A Corner Of A Foreign Field’ என்கிற புத்தகத்தை தழுவி படமாக எடுக்க, தனக்கு அழைப்பு வந்துள்ளது’ என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஐபிஎல் கால பரபரப்பில், பா.ரஞ்சித் கூறிய ‘கிரிக்கெட் வீரரின் பயோபிக்’ தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.