போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்!

Web Ads

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.

தனுஷை சந்திக்க அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். ரசிகர்களின் உற்சாகமான வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட தனுஷ், அவர்களை நோக்கி கையசைத்து தனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினார்.

இதனிடையே, தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனுஷ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழாவில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் நட்சத்திரத்துடன் தனது உருவப்படம் இடம்பெற்ற கொடியை தனுஷ் அறிமுகப்படுத்தினார். அப்போது, ரசிகர்களின் ஒற்றுமையையும் பலத்தையும் சமூக நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், சுற்றியுள்ள மக்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Web Ad 2

இதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்த தனுஷ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக 2031-ம் ஆண்டுக்குள் அவர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து தனுஷ் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடல் என பன்முகத் திறமையுடன் பயணித்து வரும் தனுஷுக்கு, அவரது 43-வது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.