இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.
நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி, தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி சௌந்தரராஜா கவுரவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், விவசாயிகளுக்கு விருதும் ரொக்கப் பரிசும் வழங்கியது தனது வாழ்க்கையின் அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்று என தெரிவித்தார். கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பும் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் நிகழ்ச்சியை நடத்த ஊக்கமளித்ததாக அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. விஜய் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இயற்கை விவசாயம் குறித்து வேளாண் செம்மல் கோ. சித்தர் சிறப்புரை வழங்கினார். நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதனும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும், உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும் என்றும் சௌந்தரராஜா வலியுறுத்தினார்.
“இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; மண்ணையும் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறை” எனக் குறிப்பிட்ட அவர், மரங்களை அதிகளவில் நடுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தனது அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சௌந்தரராஜா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’யின் தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
