இளைய திலகம் பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரில்லர் காமெடி திரைப்படம் தொடக்கம்!

Web Ads

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

டார்க் ஹியூமர் பின்னணியில், வித்தியாசமான கதைக்களத்துடன் திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக இப்படம் உருவாகிறது. விஜய் வர்மாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்பை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். வான்கோ போஸ்டர் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

‘DC’ திரைப்படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்திலும் இணைந்துள்ளனர்.

படத்தின் தொடக்க விழாவில் பேசிய நடிகர் பிரபு, இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் சிறப்பான கதையை கூறியதாகவும், இதுபோன்ற வித்தியாசமான திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிய தலைமுறை படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Web Ad 2

விஜய் வர்மா பேசுகையில், இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியளிப்பதாகவும், இப்படத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்குவது உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னை இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்ட இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் பா. ரஞ்சித், ஃபிராங்க்ளின் ஜேக்கப் தனது இணை இயக்குநராக பணியாற்றியவர் என்றும், இந்தப் படம் வழக்கமான திரைப்படமாக இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையுடன் உருவாகும் என்றும் குறிப்பிட்டார். ‘ரைட்டர்’ படத்தை மிகவும் விரும்புவதாக தெரிவித்த அவர், ஃபிராங்க்ளினுக்கு தமிழ் சினிமாவில் தனித்துவமான இடம் உள்ளது என்றும், இந்தப் படத்தின் மூலம் அது மேலும் வலுப்பெறும் என்றும் வாழ்த்தினார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திறமையை பாராட்டியதுடன், இப்படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது என்றும் தெரிவித்தார். பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் பேசுகையில், இப்படத்தில் பிரபு நடிக்க வேண்டும் என்ற யோசனையை தயாரிப்பாளர் ராகுல் முன்வைத்ததாகவும், அவரது தனித்துவமான நடிப்பு பாணியை இதுவரை ரசிகர்கள் பார்க்காத வித்தியாசமான கோணத்தில் பயன்படுத்த விரும்பியதாகவும் தெரிவித்தார். கதையை கேட்டவுடன் பிரபு ஆர்வத்துடன் நடிக்க சம்மதித்தது தங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாகவும் அவர் கூறினார்.

நடிகர் ரமேஷ் திலக், இந்தப் படக்குழுவினர் அனைவரும் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும், இளைய திலகம் பிரபுவுடன் இணைந்து நடிப்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.