அன்பில் அவன் படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” வெளியானது!

அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியாகியுள்ளது.
கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ள இப்பாடலுக்கு கார்த்திக் நேத்தா வரிகள் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடல், காதலின் வலி, பிரிவின் ஏக்கம் மற்றும் காதலியின் மீதான பெருமை உள்ளிட்ட உணர்வுகளை மையமாகக் கொண்ட மெலடியாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் இனிமையான தருணங்களை பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மறுபக்கத்தைப் பேசும் வகையில் உருவாகியுள்ளது. கார்த்திக் நேத்தாவின் உணர்வுப்பூர்வமான வரிகளும், கோவிந்த் வஸந்தாவின் இசையும், சித் ஸ்ரீராமின் தனித்துவமான குரலும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களில் கோவிந்த் வஸந்தா, சித் ஸ்ரீராம் இடம்பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.