‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார்.
காதல், இளமை மற்றும் அழகான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் தருணங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ஏகன், ‘ஹைக்கூ’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நவீனமான, கூலான இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்துள்ள நிலையில், இருவருக்கிடையேயான கெமிஸ்ட்ரி டீசரில் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.
மேலும், ஃபெமினா ஜார்ஜின் தோற்றமும் டீசரில் கவனம் ஈர்க்கிறது. குறுகிய நேரமே தோன்றினாலும், அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை அவர் பெற்றுள்ளார்.

படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். மென்மையான வயலின் இசையுடன் நவீன ஃபியூஷன் இசையும் இணைந்துள்ள அவரது பின்னணி இசை, டீசரின் காதல் உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்ய, சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இளம் நடிகர்கள், அழகான காட்சியமைப்பு, காதல் உணர்வுகள் மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.