ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ‘இம்மார்டல்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது.
படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற வெற்றி விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்டோருக்கு உயர்தர கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். மேலும், ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கையும் பரிசளித்து அசத்தினார்.
விழாவில் படத்தின் வெற்றி, ரசிகர்களின் வரவேற்பு மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசுகையில், ‘இம்மார்டல்’ திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டதாகவும், குறிப்பாக CG உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்குவதில் படக்குழு ஆரம்பம் முதலே கவனம் செலுத்தியதாகவும் தெரிவித்தார். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய ஆதரவும், சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறினார்.
படத்தின் வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகளில் முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜிவி பிரகாஷுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலனுக்கும் நன்றி கூறிய அவர், ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியானதாகவும், கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கூடுதல் காட்சிகளும் பெரிய திரைகளும் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்ததாகத் தெரிவித்தார். குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதலே ஷோ பை ஷோ வசூல் அதிகரித்ததாகக் கூறினார்.
ஜிவி பிரகாஷுடன் இதுவரை ஏழு படங்களில் பணியாற்றியுள்ளதாகவும், அந்த ஏழு படங்களுமே தனக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்த சக்திவேலன், ஜிவி பிரகாஷின் கேரியரில் அதிக வசூல் செய்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் தனது வெளியீடுகள் என்பதில் பெருமை தெரிவித்தார். மேலும், ஜிவி பிரகாஷின் நடிப்பு, சாம் சி.எஸ். இசை மற்றும் படத்தின் CG, விஷுவல்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் அவர் பாராட்டினார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், ‘இம்மார்டல்’ படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் தன்னுடைய திரைப்பயணத்தில் முக்கியமான அனுபவமாக அமைந்ததாகத் தெரிவித்தார். ஐடி துறையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த தனக்கு, இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு திரைத்துறையில் தனக்கான இடம் இருப்பதை உணர்த்தியதாகக் கூறினார். மேலும், ‘இம்மார்டல்’ படக்குழுவினர் அனைவரும் மீண்டும் இணைந்து முற்றிலும் வித்தியாசமான ஜானரில் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
நடிகர் குமார் நடராஜன், இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் உழைப்பையும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் நம்பிக்கையையும் பாராட்டினார். படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்திய CG பணிகள் மற்றும் சாம் சி.எஸ். இசையையும் அவர் குறிப்பிட்டு பேசினார். ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹரின் நடிப்பையும் பாராட்டினார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசுகையில், ‘இம்மார்டல்’ திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே தனக்கு இருந்ததாகத் தெரிவித்தார். ஒரு திரைப்படம் வெற்றி பெற கதை அல்லது பிரம்மாண்டமான மேக்கிங் மட்டுமின்றி, அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும் நேர்மறையான எனர்ஜியும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா, தனது முதல் படமான ‘இம்மார்டல்’ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர், நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மற்றும் VFX உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்தார். படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், CG பணிகளுக்காக நீண்ட காலம் பொறுமையாக காத்திருந்த தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறினார். படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைன் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட கோபி பிரசன்னா மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் ஃபேண்டஸி திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’, ரசிகர்களின் வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
