சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் ‘பிக்காசோ’!

Web Ads

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.

டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இருவரும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளுக்கு நடுவே அமர்ந்திருப்பது போல் காட்சியளிக்கின்றனர். இருவரின் இயல்பான, குறும்புத்தனமான தோற்றத்துடன் சுற்றிலும் காணப்படும் பட்டாசுகள் மாறுபட்ட திரை அனுபவத்தை எதிர்பார்க்க வைக்கின்றன.

மேலும், கையால் வரையப்பட்டது போன்ற மஞ்சள் நிற எழுத்துகளில் இடம்பெற்றுள்ள ‘PICASSO’ என்ற தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்கு தனித்துவமான கலைநயத்தை சேர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Web Ad 2

இப்படத்திற்கு கவுதம் சிவராமன் கதை எழுதி இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்வாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், விஜு விஜயன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். பிரபல பாடகர் கானா வினோத், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

டிராமா கம்பெனி சார்பில் ஏ. பாலமுருகன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர். கார்த்திகேயன், தினேஷ் பாலச்சந்திரன் மற்றும் ஆர்.ஆர். தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்களும் தயாரிப்பில் இணைந்துள்ளன.

‘பிக்காசோ’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகியுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.