பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா!

இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகிறது. மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து இசையால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, இனி சினிமா வழியாக உலகம் முழுவதும் சென்றடைய உள்ளது.
பல ஆண்டுகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை உண்மைத் தன்மையுடனும் உரிய மரியாதையுடனும் பதிவு செய்வதற்காக, தேவையான உரிமைகள், அனுமதிகள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் என பல்வேறு பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நீண்ட முயற்சி தற்போது திரைப்பட அறிவிப்பாக உருவெடுத்துள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா!
இப்படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கிறார். அவரது இசைப் பயணம் மட்டுமின்றி, உணர்வுகள், ஆசைகள், போராட்டங்கள், மனவலிமை மற்றும் ஆன்மிகப் பயணம் உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை திரையில் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இசையமைக்கிறார் அனிருத்!
இப்படத்திற்கு இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் காலத்தால் அழியாத இசை மரபையும், இன்றைய தலைமுறையையும் இணைக்கும் இசைப் பாலமாக அனிருத்தின் பங்களிப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக அறியப்படும் கவுதம் தின்னனூரி இயக்குகிறார். தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஒரு பாடகியின் வாழ்க்கைக் கதையாக மட்டுமின்றி, இசையை பக்தியாகவும், பக்தியை உணர்வாகவும், அந்த உணர்வை தலைமுறைகளை கடந்து வாழும் மரபாகவும் மாற்றிய ஒரு மகத்தான கலைஞரின் வாழ்க்கைப் பயணமாக இப்படம் உருவாக உள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளில் தொடங்கும் இந்த புதிய அத்தியாயம், அவரது அழியாத வரலாற்றை வெள்ளித்திரையில் பதிவு செய்ய உள்ளது.
