25 ஆண்டுகளுக்குப் பிறகு சவாலான கதாபாத்திரம் – கருணாஸின் என்ன விலை!

Web Ads

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் தவசிமுத்து என்ற நாணய மீட்பாளராக கருணாஸ் நடித்துள்ளார். வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் அசாதாரணமான சூழ்நிலைகளைப் பேசுகிறது.

தனது கதாபாத்திரம் குறித்து கருணாஸ் கூறுகையில், தவசிமுத்துவின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருப்பதாகவும், அவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் படிப்படியாக மிகப்பெரிய போராட்டத்திற்குள் அவரை அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் சஜீவ் பழூர் மிகவும் தெளிவான பார்வையுடன் கதையை உருவாக்கியுள்ளதாகவும், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் வலுவான சமூக கருத்தையும் படத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார். நிமிஷா சஜயன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Web Ad 2

‘என்ன விலை’ திரைப்படம், கடலில் காணிக்கையாக செலுத்தப்படும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் வாழ்வாதாரப் போராட்டத்தையும், அவரது கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்கான போராட்டம் இறுதியில் முக்கியமான சட்டப் போராட்டமாக மாறுவதையும் மையமாகக் கொண்டுள்ளது.

கருணாஸ், நிமிஷா சஜயன், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் ஜிதேஷ் வி தயாரித்துள்ளார்.

‘என்ன விலை’ செப்டம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

A Challenging Role After 25 Years - Karunas Enna Vilai