அஜித், விஜய் வளர்ச்சிக்கு காரணம் இதுதான்.. பழைய நினைவுகளை பகிர்ந்த சுரேஷ் சந்திர மேனன்

நடிகர் அஜித்குமார் ஆரம்பகட்டத்தில் மாடலிங் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலையும், நடிகர் விஜய்யுடனான தனது பழைய நினைவுகளையும் இயக்குநர் சுரேஷ் சந்திர மேனன் பகிர்ந்துள்ளார்.
‘Guru The Mentor’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், அஜித்துடன் விளம்பரப் படங்களில் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
“அஜித்குமார் முதலில் மாடலிங் துறையின் மூலமாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மியாமி குஷன், கோப்டெக்ஸ் உள்ளிட்ட பல விளம்பரப் படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். அப்போது ஒரு விளம்பரப் படத்தின் மொத்த தயாரிப்புச் செலவே ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரைதான் இருக்கும். மாடலாக நடித்த அஜித்துக்கு சுமார் ரூ.2,000 சம்பளம் வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசைக்காக ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்பட்டிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், “அஜித் மற்றும் விஜய் இருவருமே தங்களது கடின உழைப்பு, தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் மற்றும் வெற்றிகளின் மூலமாகவே இந்த உயரத்தை அடைந்துள்ளனர். முதல்வர் விஜய்க்கு 1993-ம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கினேன். அப்போது விஜய்யும் புதிய முகம், நானும் ‘புதிய முகம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர்” எனத் தெரிவித்தார்.
‘Guru The Mentor’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சுரேஷ் சந்திர மேனன் பகிர்ந்த இந்தப் பழைய நினைவுகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
