இயக்குநராக புதிய அவதாரம்… #RaPo23 படத்தின் மிரட்டலான ப்ரீ-லுக் வெளியீடு!

Web Ads

தெலுங்குத் திரையுலகின் எனர்ஜெட்டிக் ஸ்டார் ராம் போதினேனி, இயக்குநராக அறிமுகமாகும் தனது புதிய திரைப்படமான #RaPo23 படத்தின் ப்ரீ-லுக் போஸ்டரை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். ‘The Story of a LONE WOLF’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தப் போஸ்டரில் பிரம்மாண்டமான கட்டிடத்தின் படிக்கட்டுகளில் முதுகைக் காட்டியபடி நிற்கிறார் ராம் போதினேனி. கருப்பு நிற உடை, வித்தியாசமான V வடிவ ஹேர் ஸ்டைல் மற்றும் தலையின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள டாட்டூ என வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் டெடி பியரும் வைத்திருக்கும் அவரது தோற்றம் பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘லோன் வுல்ஃப்’ என்ற கதாபாத்திரத்தின் அடையாளத்தையும் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, உலகத்தைத் தனியாக எதிர்கொள்ளும் வலிமையும் சுதந்திரமும் கொண்ட மனிதன் என்பதே அதன் விளக்கமாக இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் தனித்துவமான சிந்தனையும் மன உறுதியும் கொண்ட கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருப்பது தெரிய வருகிறது.

இதற்கிடையே, ராம் போதினேனியின் திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக #DHARMAN திரைப்படம் அமையவுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்து நடிப்பதோடு, தமிழ் திரையுலகிலும் ராம் போதினேனி அறிமுகமாகிறார். அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

Web Ad 2

கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், ராப்போ சினிமேட்டிக்ஸ் (Rapo Cinematics) நிறுவனம் #RaPo23 திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு (திரு) ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார். பீட்டர் ஹெய்ன், விக்ரம் மோர் மற்றும் கெவின் ஆகியோர் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.

நடிகராகத் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ராம் போதினேனி, தற்போது இயக்குநராகவும் புதிய சவாலை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. ‘லோன் வுல்ஃப்’ கதாபாத்திரத்தின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.