அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில்!

Web Ads

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட அழகான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பான் இந்திய அளவில் தனது இசையால் கவனம் பெற்ற ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தைப் பாராட்டியதுடன், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக சிறப்பாக நடித்திருப்பதாக தெரிவித்தார். அதிதி ஷங்கரின் நடிப்பையும் பாராட்டிய அவர், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

நடிகை கலா, இப்படம் தனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியதாகவும், மறக்க முடியாத கல்லூரி நினைவுகளை ஏற்படுத்தும் படமாக ‘ஒன்ஸ்மோர்’ இருப்பதாகவும் தெரிவித்தார். இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், “தமிழில் நான் மிகவும் ரசித்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அனைவராலும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய அழகான கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்தின் ஆல்பம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றியுள்ளோம். பாடல்களை ரசிகர்கள் ஏற்கெனவே கொண்டாடி வருகின்றனர். அவை நீண்ட காலம் ரசிகர்களால் ரசிக்கப்படும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை சோனா, இப்படத்தில் தனக்கு வழங்கப்பட்ட இந்திரா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது எனக் கூறியதுடன், தன்னை நம்பி அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் படப்பிடிப்பில் தனக்கு அளித்த ஆதரவையும் நினைவுகூர்ந்தார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், “பல வெளியீட்டுத் தேதிகள் திட்டமிடப்பட்டும் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. தற்போது ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் பணியாற்றியுள்ளார். அவரது திறமைக்கு இந்தப் படம் சிறந்த அடையாளமாக இருக்கும்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் எங்களது எதிர்பார்ப்பை விட மிகச் சிறப்பான இசையை வழங்கியுள்ளார். அதிதி ஷங்கர் மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பங்களிப்பு அமைந்துள்ளது. அனைவரின் உழைப்பும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் மிகப்பெரிய பலம்” என்றார்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த், “இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னத்திற்கு சமர்ப்பிக்கிறேன். அவரது படங்களைப் பார்த்துதான் இயக்குநராக வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது. அவருக்கான என்னுடைய காதல் கடிதம்தான் இந்தப் படம்.

இந்தக் கதையை எழுதத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே ரகு கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். அவர் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். அதிதி ஷங்கரும் பல சிரமங்களுக்கு இடையே எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து சிறப்பாக நடித்துள்ளார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவுக்கும் நன்றி.

படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாக பிரிக்க முடியாத அளவுக்கு அழகாக இணைத்திருக்கிறார். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.

Web Ad 2

நடிகை அதிதி ஷங்கர், “தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இந்தப் படம் எனக்கு கிடைத்தது. படப்பிடிப்பில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது.

ஹேஷாம் அப்துல் வஹாப் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். இப்படத்தில் அவர் எனக்காக உருவாக்கியுள்ள பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. சோனா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்தில் அவரை வித்தியாசமான கதாபாத்திரத்தில், குறிப்பாக லவர் பாயாக ரசிகர்கள் ரசிப்பார்கள். ‘ஒன்ஸ்மோர்’ அனைவருக்கும் பிடிக்கும் அழகான டிராமா” என்றார்.

நடிகர் அர்ஜுன் தாஸ், “விக்னேஷ் ஸ்ரீகாந்த் முதலில் படத்தின் ஒன்லைனை மட்டும் என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் பல நிறுவனங்களிடம் கதையை அவர் கூறியபோது, ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாம்’ என சிலர் கூறியுள்ளனர். ஆனால், ‘ரகுவாக அர்ஜுன் தாஸால் மட்டுமே நடிக்க முடியும்’ என்று என்னை முழுமையாக நம்பி விக்னேஷ் உறுதியாக நின்றுள்ளார்.

என்னை முழுமையாக நம்பிய இயக்குநருக்கு எனது நன்றி. இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. இது அவரது அறிமுகப் படம் என்பதால், ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் ‘ஒன்ஸ்மோர்’ அவரது திறமையை நிச்சயம் வெளிப்படுத்தும்.

ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. கதையைக் கேட்டவுடன் அவர் உடனடியாக படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். அவரது இசை படத்தை மேலும் அழகாக்கியுள்ளது.

சோனா இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு இது ஒரு முக்கியமான அடையாளமாக அமையும். அதிதி ஷங்கரும் படத்திற்கு தேவையான எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்துள்ளார். தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பல சிரமங்களுக்கிடையிலும் படத்தை முழுமையாக முடித்துள்ளனர்.

‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.

பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கம் மேற்கொண்டுள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

காதல், நட்பு, இளமை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.