20 ஆண்டுகால ‘சூப்பர் சிங்கர்’ பயணம்… 12-வது சீசனில் அதிரடி மாற்றம்!

Web Ads

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’, தனது 20 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், 12-வது சீசனுடன் புதிய பரிமாணத்தில் களமிறங்குகிறது. ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்ட அறிமுக ப்ரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன.

இந்த சீசனின் சிறப்பம்சமாக, கடந்த காலங்களில் போட்டியாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் பங்கேற்று, தற்போது திரையிசையில் முன்னணி பின்னணிப் பாடகர்களாக உயர்ந்துள்ள முன்னாள் நட்சத்திரங்கள் நடுவர்களாகக் களமிறங்குகின்றனர்.

அந்த வகையில், சத்ய பிரகாஷ், நிவாஸ், திவாகர், பிரவீன் சைவி, ஆர்.கே. ஆதித்யா, செந்தில், சந்தோஷ் ஹரிஹரன் ஆகிய ஏழு ஆண் பாடகர்களும், புண்யா, பிரியங்கா, ரக்ஷிதா, நித்யஸ்ரீ, ரோஷினி, ராஜலட்சுமி, சிவாங்கி ஆகிய ஏழு பெண் பாடகர்களும் என மொத்தம் 14 பேர் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்த சீசனில் வழக்கமான அரங்க அமைப்புக்கு மாற்றாக, பிரம்மாண்டமான நேரடி இசைக் கச்சேரி மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடகர்களுக்கு அருகிலேயே ரசிகர்கள் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கும் வகையில் பிரத்யேக ‘ஃபேன் பிட்’ பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களுக்கு நேரடி இசைக் கச்சேரியைப் போன்ற அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Ad 2

இந்நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக ஸ்ருதிகா அறிமுகமாகிறார். அவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இருந்து வரும் மா.கா.பா ஆனந்தும் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பாடகர்களை அறிமுகப்படுத்தி, பலரது இசைப் பயணத்திற்கு அடித்தளமாக இருந்துள்ளது ‘சூப்பர் சிங்கர்’. அந்தப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், முன்னாள் போட்டியாளர்கள் நடுவர்களாகத் திரும்புவதுடன், புதிய தலைமுறைப் பாடகர்களுக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த சீசன் வழங்கவுள்ளது.

இசை, பொழுதுபோக்கு மற்றும் பிரம்மாண்டமான மேடை அனுபவம் எனப் பல புதுமைகளுடன் உருவாகியுள்ள ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ நவம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை ஜியோஹாட்ஸ்டாரிலும் காணலாம்.