தவெக-வில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள சாய்பாபா கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் தனது நிலைப்பாடு குறித்தும், தமிழர் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
அப்போது பேசிய மன்சூர் அலிகான், “நான் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்தேன். ஆனால் தற்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
மேலும், “கோட் பட தயாரிப்பாளர், ஜனநாயகன் பட தயாரிப்பாளர் ஆகியோருக்கு அரசில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அதைவிட தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகள்தான் எனக்கு முக்கியம்” என அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவது, காவல் நிலையங்களில் நடைபெறும் உயிரிழப்புகள் மற்றும் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் போன்றவை நடைபெறக்கூடாது என்றும் மன்சூர் அலிகான் கூறினார்.
கர்நாடகாவில் அணை கட்டும் விவகாரத்திற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். “தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் கர்நாடகாவில் அணை கட்டப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். கால்நடைகளும் பாதிக்கப்படும். இதுபோன்ற பாதிப்புகளை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது” என்றார்.
மேலும், “பழனி பாபா, வீரப்பன், பிரபாகரன், தமிழரசன் போன்றவர்கள் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் போன்றவர்கள் மீண்டும் உருவாகலாம். இந்தியாவில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும்” என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், SIR, NEET மற்றும் EVM இயந்திரத்திற்கு எதிராக விரைவில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.