டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்ற நிலையில், ‘காந்தா’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சமுத்திரக்கனி, சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.
நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டதற்காக இந்த விருதை பெற்றுள்ளார்.
கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் நடிப்பின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. மொழிகளும் கதாபாத்திரங்களும் மாறினாலும், அவரது நடிப்பில் தனித்துவம் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார், கிச்சா சுதீப், மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.