“இது சின்ன படம் இல்லை… ரொம்ப முக்கியமான படம்” – நடிகை அனுமோல்

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன், “பாரிஸ் கஃபே சிறிய பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், சமூகத்தில் நடக்கும் முக்கியமான விஷயத்தைப் பேசும் வலுவான செய்தியைக் கொண்ட படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இப்படத்தில் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. இயக்குநர் சராஜ் சீலன் கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவுக்காக முயற்சி செய்து வருகிறார். இந்தப் படத்திற்காகவும் அவர் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்” என்றார்.
இணை தயாரிப்பாளர் லிங்கேஸ்வரன், “சினிமாத்துறை எனக்கு புதிது. இந்தப் படம் முடிந்த பிறகு மீண்டும் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் இயக்குநர்தான்” என்று தெரிவித்தார்.
படத்தின் எடிட்டர் சாபு பேசுகையில், “சராஜ் சீலன் முதல் படத்தை இயக்கும் இயக்குநர் போல் தெரியவில்லை. அனைத்தையும் மிகவும் சிறப்பாக செய்துள்ளார். அவருடைய 20 வருட கனவு நனவாகியிருப்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் மித்ரன் ஜவஹர், “ஒரு இயக்குநருக்கு மனைவியே தயாரிப்பாளராக கிடைப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். குரு சோமசுந்தரம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் சாய் விக்கி, இப்படம் தனக்கு மிகவும் முக்கியமான வாய்ப்பு என்று குறிப்பிட்டார். “ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இந்தப் படத்தில் எனக்கு ஒரு பெயர் கொடுத்து, படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தை இயக்குநர் வழங்கியுள்ளார். ஒரு வலுவான கருத்தை மிகவும் மென்மையாகச் சொல்லும் படமாக ‘பாரிஸ் கஃபே’ உருவாகியுள்ளது” என்றார்.
நடிகை அனுமோல் பேசும்போது, “நான் சமூகத்திற்குத் தேவையான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் நம்பிக்கையுடன் கூறியதால் நடித்தேன். இது ஒரு சிறிய படம் அல்ல; மிகவும் முக்கியமான படம்” என்றார்.
நடிகர் குரு சோமசுந்தரம், “இயக்குநர் கதை சொன்னவுடனேயே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது ஒரு கன்டென்ட் ஓரியண்டட் படம். கௌசல்யா சங்கர் போன்றவர்கள் இங்கு இருக்க வேண்டிய நிலை இனி உருவாகக்கூடாது. பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பாக வளராது. நாம் மாறினால்தான் எல்லாமே மாறும். அந்த மாற்றத்தைப் பற்றி இப்படம் பேசுகிறது” என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கௌசல்யா சங்கர், “இந்தப் படம் சமூகத்திற்கு மிகவும் தேவையான படம். காதல் இதில் மிகவும் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதில் நிலவும் பிற்போக்குத்தனத்தை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான மாற்றத்திற்கும் இப்படம் வழிவகுக்கும் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் சராஜ் சீலன் தனது 20 ஆண்டுகால சினிமா கனவு குறித்து பேசுகையில், சிறு வயது முதலே சினிமா மீது தனக்கு இருந்த ஆர்வம் மற்றும் தனது தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “குரு சோமசுந்தரம் முதல் முறை கதை கேட்டவுடனேயே மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி நடிக்க ஒப்புக்கொண்டார். அனுமோலும் தொலைபேசியில் கதையைக் கேட்டுவிட்டு சம்மதித்தார். படத்தில் நடித்த அனைவரும் முழுமையான ஆதரவு அளித்தனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.
சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’, வலுவான கருத்தை அழுத்தமில்லாமல் பதிவு செய்யும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகவில்லை.
