பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலர்!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் Prime Focus Studios, எட்டு முறை ஆஸ்கர் விருது வென்ற VFX நிறுவனமான DNEG மற்றும் யஷின் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலகின் மிகப் பழமையான மகாகாவியங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் பிரம்மாண்ட திரைப்படம், 2026 தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது. சர்வதேச அளவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடும் இப்படத்தை, வட இந்தியாவில் தர்மா புரொடக்ஷன்ஸ் விநியோகம் செய்கிறது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் இராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் ரவி துபே லட்சுமணனாக, அருண் கோவில் தசரதராக, ஷோபனா கைகேயியாக, அஜிங்க்யா தேவ் விஸ்வாமித்திரராக, குனால் கபூர் தேவேந்திரனாக, ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைக்கதையை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் எழுதியுள்ளார். இசையில் உலகப் புகழ்பெற்ற இரு இசை மேதைகளான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் முதல் முறையாக இணைந்துள்ளதும் படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளரும் படைப்பாற்றல் வடிவமைப்பாளருமான நமித் மல்ஹோத்ரா, “ராமாயணம் ஒரு இதிகாசம் மட்டுமல்ல; அது நமது பண்பாடு, வாழ்க்கை முறை மற்றும் தலைமுறைகளை இணைக்கும் ஆன்மிக பாரம்பரியம். இந்தியாவின் மிகப்பெரிய கதையை உலகத் தரத்தில் கொண்டு செல்லும் முயற்சிதான் இந்த திரைப்படம்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி கூறுகையில், “ராமாயணத்தின் உணர்வுகளையும், மனிதநேயத்தையும், ஆன்மாவையும் முழு மரியாதையுடனும் உண்மைத்தன்மையுடனும் திரையில் கொண்டு வருவதே எங்களின் நோக்கம். உலகின் சிறந்த தொழில்நுட்பத்துடன் இந்த மகத்தான காவியத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, உலகத் தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ், நட்சத்திர நடிகர் பட்டாளம் மற்றும் இரு இசை ஜாம்பவான்களின் கூட்டணியால் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பகுதி 1’, 2026 தீபாவளியில் உலக சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.