‘அன்பே டயானா’ வெற்றிவிழா – படக்குழுவினர் நெகிழ்ச்சி!

Web Ads

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து, பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்தனர். இதில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம் மற்றும் வெற்றி குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

“காதல், சமத்துவத்தை அழகாக சொல்லும் படம்”

படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகன், படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் தனது எழுத்து மற்றும் இயக்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து, படைப்புச் சுதந்திரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘ஜமா’ படத்திற்கு கிடைத்த ஆதரவையும் நினைவுகூர்ந்த பாரி, ‘அன்பே டயானா’ படத்தின் மூலம் காதல், சமத்துவம், தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட கருத்துகளை நகைச்சுவை மற்றும் எளிமையான திரைக்கதை வழியாக சொல்ல முயன்றதாகத் தெரிவித்தார்.

“மேஜிக் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி”

நடிகை ரம்யா ரங்கநாதன், படத்தில் ‘மேஜிக்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் தன்னை ‘மேஜிக்’ என அழைத்தது மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் ‘Hi Magic’ என்று அழைத்த தருணங்கள் தன்னால் மறக்க முடியாதவை என்றும், படத்தின் மீதான நேர்மறையான விமர்சனங்களும் ஊடகங்களின் ஆதரவும் முதல் வாரத்தில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

“இரண்டாவது வாரத்திலேயே முதலீடு திரும்பியது”

Web Ad 2

சென்னை விநியோகஸ்தர் வம்சி, ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் மூலம் தனது விநியோகப் பயணத்தை தொடங்கியதாக தெரிவித்தார். படத்தை பார்த்த உடனேயே பிடித்துப்போனதால், இதன் மூலமாகவே விநியோகத் துறையில் களமிறங்க முடிவு செய்ததாகவும் கூறினார்.

மேலும், இப்படத்தில் செய்த முதலீடு இரண்டாவது வாரத்திலேயே முழுமையாக திரும்பிவிட்டதாகவும், பெரிய படங்களின் போட்டிக்கு மத்தியிலும் ‘அன்பே டயானா’ ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“நல்ல குடும்பப் படங்கள் தொடர்ந்து வர வேண்டும்”

பாடலாசிரியர் பாக்கியம் சங்கர், வடசென்னையை பின்னணியாகக் கொண்டிருந்தாலும் வழக்கமான வன்முறை காட்சிகளைத் தவிர்த்து, அழகான காதல் கதையை படக்குழு உருவாக்கியிருப்பதே படத்தின் மிகப்பெரிய பலம் என்று பாராட்டினார்.

பாடலாசிரியர் முத்தமிழ், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படங்களில் ‘அன்பு’ தொடர்ந்து முக்கியமான கருவாக இருப்பதாகக் குறிப்பிட்டு, ‘அன்பே டயானா’ ஜாதி, மத எல்லைகளைக் கடந்து காதலும் அன்பும்தான் மிகப்பெரியது என்ற கருத்தை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இசையமைப்பாளர் பரத் சங்கர், இயக்குநர் பாரி இளவழகனுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பாராட்டியதுடன், படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை விமர்சனங்களில் பாராட்டிய ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

‘அன்பே டயானா’ திரைப்படத்தில் பாரி இளவழகனுக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ளது. பரத் சங்கர் இசையமைக்க, ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்த்தா படத்தொகுப்பையும், மகேந்திரன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ஜூலை 17-ம் தேதி வெளியான ‘அன்பே டயானா’, தற்போது ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.