வித்யுத் ஜம்வால் நடித்த ‘ஸ்ட்ரீட் பைட்டர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது

Web Ads

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பாரமவுண்ட் பிக்சர்ஸ், லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் மற்றும் கேப்காம் இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்தில் நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா, ஆண்ட்ரூ கோஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில், ஆக்‌ஷன் நடிகர் வித்யுத் ஜமால் இப்படத்தில் புகழ்பெற்ற யோகா குருவான தல்சிம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் என ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது.

1993-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் கதையில், பிரிந்து சென்ற போர்வீரர்களான ரியூ மற்றும் கென் மாஸ்டர்ஸ் மீண்டும் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. மர்மமான சுன்-லி, அடுத்த ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டியில் பங்கேற்க இருவரையும் அழைக்கிறார்.

விதி, கோபம் மற்றும் பழைய காயங்களுடன் மோதும் இந்தப் போட்டியின் பின்னணியில் உயிருக்கு ஆபத்தான சதித்திட்டம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது. இதனால் ரியூவும் கெனும் ஒருவருக்கு ஒருவர் எதிராக மோதுவதுடன், தங்களது கடந்த காலத்தின் இருண்ட நினைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

Web Ad 2

ஆர்கேட் கேமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உலகத்தை வெள்ளித்திரைக்கு கொண்டு வரும் இப்படத்தை கிடாவோ சகுராய் இயக்கியுள்ளார். ‘ஹடூகன்’, ‘ரவுண்ட்ஹவுஸ் கிக்’ உள்ளிட்ட பிரபலமான ஆக்‌ஷன் அம்சங்களுடன், கேம் கதாபாத்திரங்கள் பலரும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

நோவா சென்டினியோ கென் மாஸ்டர்ஸாகவும், ஆண்ட்ரூ கோஜி ரியூவாகவும், கலினா லியாங் சுன்-லியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜோ ரோமன் ரெய்ன்ஸ், அனோஆய், டேவிட் டாஸ்ட்மால்சியன், கோடி ரோட்ஸ், ஆண்ட்ரூ ஷுல்ஸ், எரிக் ஆண்ட்ரே, வித்யுத் ஜமால், ஆர்வில் பெக், ஒலிவியர் ரிக்டர்ஸ், ஹிரோஒக்கி கோட்டோ, ரெய்னா வல்லாண்டிங்காம், அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி, கர்டிஸ் ‘50 சென்ட்’ ஜாக்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக ஜேசன் மோமோவா பிளாங்கா கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதேபோல், வித்யுத் ஜமாலின் கதாபாத்திரமும் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் 2026 அக்டோபர் 16-ம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.