சசிகுமார் நடிப்பில் வதந்தி சீசன் 2 டிரெய்லர் வெளியீடு!

பிரைம் வீடியோவின் பிரபல தமிழ் ஒரிஜினல் தொடரான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமாக உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோட்கள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, மறைக்கப்பட்ட ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த மர்மத் தொடர் உருவாகியுள்ளது.
மதுரையை கதைக்களமாகக் கொண்டுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லரில், நடிகர் சசிகுமார் நேர்மையான காவல் அதிகாரியான SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெறும் இடத்தில் கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கூடு, SI மூசா ரஸாவை ‘மணி’ என்ற மர்மமான கைதியை தேடும் விசாரணைக்குள் அழைத்துச் செல்கிறது. சாதாரண கொலை வழக்காக தொடங்கும் இந்த விசாரணை, பின்னர் அரசியல், ஊடக அழுத்தம், பொதுமக்களின் பார்வை மற்றும் மனித பலவீனங்கள் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பயணமாக மாறுகிறது.

மதுரையின் கலாச்சார பின்னணி மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழாவின் சூழலில் நகரும் இந்த கதை, உண்மையை தேடும் ஒரு பரபரப்பான மர்மப் பயணமாக அமைகிறது.
இந்த தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் கூறுகையில், “வதந்தி எப்போதும் நாம் நம்பும் விஷயங்களையும், நாம் புறக்கணிக்கும் சங்கடமான உண்மைகளையும் கேள்விக்குட்படுத்தும். இந்த சீசனில் அதிகாரம், மௌனம் மற்றும் அமைப்புகள் நீதியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராயும் மர்மக் கதையை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
SI மூசா ரஸா கதாபாத்திரம் குறித்து நடிகர் சசிகுமார் கூறுகையில், “உண்மைக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நேர்மையான மனிதராக மூசா ரஸா இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பயணம் ஒரு விசாரணை மட்டுமல்ல, ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் இருக்கும்” என்றார்.
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தமிழ் மொழியுடன் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.