‘பீப்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… செப்டம்பரில் திரைக்கு வரும் புதிய க்ரைம் திரில்லர்!

எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest Movies) தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘பீப்’ (Beep). இப்படத்தை இல. சண்முகசுந்தர் எழுதி இயக்கியுள்ளார்.
‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் விஹாரி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் பத்மகுமார், படத்தொகுப்பை அபிஷேக் மற்றும் விக்னேஷ் மேற்கொண்டுள்ளனர். மைஸ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள ட்ரெயின் படத்தில் பணியாற்றிய ராம்குமார் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் இல. சண்முகசுந்தர் கூறுகையில், “ஐடி துறையில் பணியாற்றிய நான், தரமான சினிமா உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறைக்கு வந்தேன். ‘கட்டு (Bind)’ என்ற குறும்படத்தின் மூலம் பயணத்தைத் தொடங்கினேன். தற்போது ‘பீப்’ எனது முதல் முழுநீள திரைப்படமாக உருவாகியுள்ளது” என்றார்.
மேலும், “பகுத்தறிவும் ஃபேண்டஸியும் கலந்த ஹை கான்செப்ட் க்ரைம் டிராமாவாக ‘பீப்’ உருவாகியுள்ளது. துப்பாக்கி, கத்தி இல்லாமலேயே புத்திக்கூர்மை ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்க முடியும் என்பதை இந்தப் படம் வலியுறுத்துகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு புகைப்படத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஒரு நபரின் மனநிலையையும், குற்றத்தின் பின்னணியையும் ஆராய்ந்து உண்மையை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட கதாநாயகனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஆறு நண்பர்களில் ஒருவர் மர்மமாக உயிரிழக்க, அந்த மரணத்தின் உண்மையை மீதமுள்ள நண்பர்கள் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள் என்பதே படத்தின் திரைக்கதை.
கதாநாயகனுக்கு மட்டுமல்லாமல் கதாநாயகி மற்றும் நண்பர்கள் கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள ‘பீப்’, தற்போது சென்சார் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், தீபக் தினகர், சுஹாசினி, கோமல் சர்மா ஆகியோர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி வெளியிட்டனர்.
