ஏகன் ஒரு கருப்பு வைரம் – இயக்குநர் பொன்ராம் புகழாரம்!

Web Ads

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “தளபதியின் பல படங்கள் வெளியான திரையில், என்னுடைய தம்பி ஏகனின் படமும் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏகன் கடின உழைப்பாளி. இயக்குநர், படக்குழுவினர் மற்றும் இன்றைய நாயகன் சித்து உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல கருத்துகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்கள் சமீபத்தில் அதிகம் வெளியாகவில்லை. அந்தக் குறையை ‘ஹைக்கூ’ போக்கும் என்று நம்புகிறேன். படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், “இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான மன ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் துல்லியமாகப் படமாக்கியிருக்கிறார்கள். அதற்கு சித்து சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். பாடல்களும் நன்றாக உள்ளன. படம் மிகப்பெரிய வெற்றிபெறும். ஏகன் திரையுலகில் பெரிய இடத்தை அடைவார்” என்றார்.

பாடலாசிரியர் மோகன்ராஜா பேசுகையில், “‘ஹைக்கூ’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குநருக்கு வாழ்த்துகள். ஹைக்கூ என்பது ஒரு தரிசனம், அன்பு. எனக்குப் பல ஹைக்கூ கவிதைகள் பிடிக்கும். இந்தத் தலைமுறையினரிடமும் ஹைக்கூ கவிதைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த சித்துவுக்கு நன்றி. ஏகன் இன்னும் பெரிய அளவில் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் சித்துகுமார் பேசுகையில், “‘ஹைக்கூ’ என்னுடைய 15-வது படம். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. விஷன் சினிமா ஹவுஸ் எப்போதும் எனக்கு ஸ்பெஷலான நிறுவனம். ஏகன் மிகவும் இனிமையானவர். தமிழ் சினிமாவில் அவர் பெரிய இடத்தைப் பிடிப்பார் என்று நம்புகிறேன். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், “‘ஹைக்கூ’ மிகவும் எளிமையான கதை கொண்ட திரைப்படம். இரண்டு விதமான காதலை நுணுக்கமாகச் சொல்லியிருக்கும் இயக்குநருக்கும், சிறப்பாக நடித்த நடிகர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் படக்குழுவினருக்கு ஒரு மைல்கல் திரைப்படமாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “‘ஹைக்கூ’ படத்தைப் பார்த்துவிட்டேன். இது ஒரு கவிதையான திரைப்படம். புதுமையான கதைக்களத்துடன், காதலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார்கள். இப்படியொரு கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் யுவராஜுக்கு வாழ்த்துகள். கதாநாயகிகள் இருவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் அதிர்ச்சி அருண் பேசுகையில், “‘ஹைக்கூ’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அருள் மற்றும் இயக்குநருக்கு நன்றி. மலையாளத் திரைப்படங்களுக்கும் நடிகர்களுக்கும் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கதாநாயகி ஃபெமினா ஜார்ஜும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவார் என்று நம்புகிறேன். ஸ்ரீதேவி திறமையான நடிகை. ஏகன் எனக்கு தம்பி போன்றவர். அவர் பெரிய கதாநாயகனாக வருவார். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

இயக்குநர் பொன்ராம் பேசுகையில், “‘ஹைக்கூ’ வித்தியாசமான காதல் கதை. மகளிர் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் மாணவர் படிப்பது என்ற கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தது. டிரெய்லரில் காதல் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் நன்றாக இடம்பெற்றிருந்தன. சித்துவின் இசை அருமையாக உள்ளது. ஏகன் ஒரு கருப்பு வைரம். அவர் நிச்சயம் நல்ல இடத்தை அடைவார். ஃபெமினா, ஸ்ரீதேவி இருவரும் சிறப்பான நடிகர்கள். தயாரிப்பாளர் அருள் பிரம்மாண்டமாகவும் வண்ணமயமாகவும் படத்தை உருவாக்கியிருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்றார்.

Web Ad 2

நடிகை ஃபெமினா ஜார்ஜ் பேசுகையில், “நான் முதலில் பார்த்த தமிழ்ப் படம் தளபதியின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. அந்த வகையில், ‘ஹைக்கூ’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். ஏகன் சிறந்த நடிகர். ஸ்ரீதேவியுடன் ஒருநாள் இணைந்து நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்தில் அறிமுகப்படுத்த உதவிய சுரேஷ் சந்திரா சாருக்கும் நன்றி. சித்துவின் இசை அற்புதமாக வந்திருக்கிறது. இந்தப் படம் என் குடும்பத்துக்குப் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை ஸ்ரீதேவி பேசுகையில், “தமிழில் நான் அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹைக்கூ’. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஆர்.ஜே. நிதி பேசுகையில், “இது எனது முதல் திரைப்படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் யுவராஜ் மற்றும் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்துக்கு நன்றி. சித்து இசையில் அசத்தியிருக்கிறார். ஏகன், அருண் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்புத் தளத்தில் கலகலப்பாக வைத்திருந்தனர். படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமி பேசுகையில், “படத்தை உருவாக்கும்போது பெரிய அளவில் நிபந்தனைகள் எதையும் விதிக்காமல் முழு சுதந்திரம் அளித்த தயாரிப்பாளர் அருள் சாருக்கு நன்றி. ஒத்துழைப்பு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. சித்துவின் இசை ஆல்பம் சிறப்பாக வந்துள்ளது. நான் சொன்னதை நம்பி, அதற்கேற்ப நடித்த ஏகன், ஃபெமினா, ஸ்ரீதேவி ஆகியோருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் டி. அருளானந்து பேசுகையில், “விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் மூன்றாவது திரைப்படம் ‘ஹைக்கூ’. சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதற்காக ஏகன் 18 ஆண்டுகளாகக் கடினமாக உழைத்திருக்கிறார். சிறப்பாக நடித்தால் மட்டுமே சினிமாவில் நீடிக்க முடியும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். நான் எதிர்பார்த்ததை இயக்குநர் யுவராஜ் திரையில் கொண்டு வந்திருக்கிறார். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. விஷன் சினிமா ஹவுஸின் அடுத்த ஐந்து படங்களுக்கும் சித்துதான் இசையமைப்பாளர். இப்படத்தின் இசையும் கவிதையைப் போல அமைந்துள்ளது. படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் ஏகன் பேசுகையில், “அதிர்ச்சி அருணும் நானும் பல ஆண்டுகளாக நண்பர்கள். பல தொடர்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். தற்போது ‘ஹைக்கூ’ படத்திலும் இணைந்து நடித்துள்ளோம். அற்புதமான பாடல்களைக் கொடுத்த சித்து சாருக்கு நன்றி. கதாநாயகிகள் இருவரும் இயக்குநரை நம்பி நடித்தார்கள். அவர்கள் இருவரும் பெரிய இடத்தை அடைவார்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஆதரவளித்த அப்பாவுக்கும் நன்றி. அக்டோபர் 23-ம் தேதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றார்.

இறுதியாக, சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்திவேலன் பேசுகையில், “விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தை நம்பிப் படம் செய்யலாம். அந்த அளவுக்குக் கடின உழைப்பை வழங்குவார்கள். ‘ஹைக்கூ’ திரைப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதைக்களத்துடனும், இசை மற்றும் நகைச்சுவை அம்சங்களுடனும் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.