உணர்வுப்பூர்வமான உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கூடு’!

Web Ads

பனோரமா ஸ்டுடியோஸ் (Panorama Studios) நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் (Skymoon Entertainment) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ (KOODU). அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம், வியப்பூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. மனிதநேயம், கருணை மற்றும் சமூக ஒற்றுமையை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக ‘கூடு’ உருவாகியுள்ளது.

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் அரிய வகைப் பறவை ஒன்று மின்மாற்றியில் கூடு கட்டி முட்டையிட்டுள்ளது. அந்த முட்டைகளையும் பறவையின் வாழ்வையும் பாதுகாக்கும் நோக்கில், ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒரு வியக்கத்தக்க முடிவை எடுத்துள்ளனர். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் வரை தொடர்ந்து 35 நாட்களுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க கிராம மக்கள் முன்வந்துள்ளனர். இத்தகைய நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவமே இப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

நகைச்சுவை, அன்பு, உணர்ச்சி எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம், ஒற்றுமையின் வலிமையையும் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. சாதாரண மனிதர்களின் சிறிய தியாகங்கள்கூட எத்தகைய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்யவுள்ளது.

தமிழகத்தின் உண்மையான கிராமப்புறப் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி, நமோ நாராயணா, ஷா ரா, சார்லஸ் வினோத், அனிதா சம்பத், சசி செல்வராஜ், திராவிட் செல்வம், VJ ஆஷிக் மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.

இப்படம் குறித்து பனோரமா ஸ்டுடியோஸ் தலைவர் குமார் மங்கட் பதக் கூறுகையில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உணர்வுகள், அன்பு மற்றும் சமூக ஒற்றுமையை அழகாக இணைத்திருக்கும் ‘கூடு’ திரைப்படத்தின் கதை தங்களை வெகுவாகக் கவர்ந்ததாகவும், ரசிகர்களின் மனதில் இப்படம் நிச்சயம் இடம்பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Web Ad 2

பனோரமா ஸ்டுடியோஸ் நிர்வாக இயக்குநர் அபிஷேக் பதக் பேசுகையில், மற்றொரு உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்யும் சிறிய தியாகம்கூட மிகப்பெரிய அர்த்தத்தைக் கொண்டது என்பதை இப்படம் உணர்த்தும் என்றும், ஒரு பறவையின் கூட்டைப் பாதுகாக்க ஒட்டுமொத்த கிராமமும் ஒன்றிணைந்த சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் எம். கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி ஆகியோரும் இப்படத்தின் மனிதநேயமும் உணர்வுப்பூர்வமான கதைக்களமும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சென்றடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், எம். கணேஷ், சூனில் ஜெயின், ஆதித்யா ஜோஷி மற்றும் லிஷா P. சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் மேனன் இணைத் தயாரிப்பாளராகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

பனோரமா ஸ்டுடியோஸ் இப்படத்தை உலகளவில் வெளியிடுகிறது.

‘கூடு’ – விரைவில் திரையரங்குகளில்!