விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

Web Ads

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini), சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

இன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் ராப் இசைக் கலைஞர் பால் டப்பா இப்படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, பாடல் வரிகளை எழுதி, பாடியும் நடனமாடியும் உள்ளார். இளைஞர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் முன்னிலையில் பாடலை வெளியிட வேண்டும் என்ற படக்குழுவின் விருப்பத்தின்படி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சவேதா கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் பாடலை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். 5000 மாணவர்கள் முன்னிலையில் பாடல் திரையிடப்பட்டபோது, மாணவர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து பாடலைக் கொண்டாடினர். இளைஞர்களின் உற்சாகமான வரவேற்பால் பாடல் வெளியீட்டு விழா களைகட்டியது.

Web Ad 2

இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் துள்ளலான இசையுடனும், சமகால ராப் இசையின் தனித்துவமான அம்சங்களுடனும் ‘நந்தினி’ பாடல் உருவாகியுள்ளது. இப்பாடலை வேடன், பால் டப்பா, கிஷோர் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இசை, பாடல் வரிகள், பாடல் வெளிப்பாடு மற்றும் நடனம் எனப் பல்வேறு தளங்களில் பால் டப்பா பங்களித்திருப்பது பாடலுக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்துள்ளது. மாணவர்களின் வரவேற்பு, பாடல் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுனன், சுனில், ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், ஜெஃப்ரி, இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமான கதைக்களத்துடனும், இளைஞர்களைக் கவரும் பல்வேறு அம்சங்களுடனும் உருவாகி வரும் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.