ரஜினியின் ‘ஜெயிலர் 2’ உடன் வெளியாகும் ‘டிரோன்ஸ்’ – சித்தி இத்னானி நெகிழ்ச்சி

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன், இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் மற்றும் படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் கலந்துகொண்டு, படத்தின் உருவாக்கம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் பேசுகையில், “இது என்னுடைய முதல் திரைப்படம். இயக்குநர் ராகவ் மிர்தாத்தை நண்பர் ஒருவரின் வீட்டில் சந்தித்தேன். அப்போது பத்து நிமிடங்கள் பேசியதிலேயே இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். அவர் பல கதைகளைச் சொன்னார். ஆனால், எனக்கு ஒரு நகைச்சுவைப் படம் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அப்படித்தான் இந்தப் படம் உருவானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
சினிமாவாலா சதீஷ் பேசுகையில், “இந்த மேடை எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. பல ஆண்டுகளாகப் பத்திரிகையாளர்கள் மத்தியில் அமர்ந்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காததால், தொழில்நுட்பப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். தற்போது மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் மற்றும் இயக்குநர் ராகவ் மிர்தாத் இருவருக்கும் நன்றி.
‘பன் பட்டர் ஜாம்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் போலவே, இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. அதேபோன்ற வித்தியாசமான அணுகுமுறை ‘டிரோன்ஸ்’ படத்திலும் இருக்கும். எங்களுடைய முயற்சிக்கும் படக்குழுவினருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
ஆர்.ஜே. தீபக் பேசுகையில், “ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது, ஒருநாள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நின்று பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இன்று அந்தக் கனவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ராகவ் மிர்தாத் மற்றும் தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் இருவருக்கும் நன்றி.
நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. வானொலியில் நான் செய்த பணியின் மூலம் கிடைத்த அங்கீகாரம் இந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்துள்ளது. இந்தப் படத்தில் சிறிது நேரம் மட்டும் தோன்றும் கதாபாத்திரமாக இல்லாமல், படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
என்னுடன் நடித்த அஞ்சலி நாயர், சித்தி இத்னானி, சினிமாவாலா சதீஷ் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும். உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
நடிகை அஞ்சலி நாயர் பேசுகையில், “என்னுடைய முந்தைய படங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவைப் போலவே, ‘டிரோன்ஸ்’ படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. சிறிய குழுவாக இருந்தாலும், வலிமையான அணியாக இணைந்து பணியாற்றியிருக்கிறோம்.
‘டிரோன்ஸ்’ திரைப்படம் ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இதில் பல விசித்திரமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதேசமயம், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. நிற அரசியல், நிறவெறி மற்றும் காதல் தொடர்பான சில தீவிரமான விஷயங்களையும் இப்படம் பேசுகிறது. அவற்றைப் பொழுதுபோக்கு பாணியில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளோம்.
அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் இப்படத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளியுங்கள். சிறிய படங்கள் ரசிகர்களின் விமர்சனங்கள் மற்றும் வாய்மொழி வரவேற்பின் மூலமாகவே அதிகமான மக்களைச் சென்றடைகின்றன. வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்கள் தொடர்ந்து தமிழில் உருவாக வேண்டும்” என்றார்.
நடிகை சித்தி இத்னானி பேசுகையில், “ரஜினிகாந்த் சாரின் ‘ஜெயிலர் 2’ போன்ற பெரிய படத்துடன் எங்களுடைய சிறிய படமும் வெளியாக இருப்பது எங்களுக்குப் பெருமை. தலைவரின் படத்திற்கு முன்னால் எங்களுடைய படம் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். தமிழ் சினிமாவைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போதெல்லாம் என் நினைவுக்கு முதலில் வருபவர் ரஜினிகாந்த். அவருடைய எளிமையும் பணிவும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்திருக்கிறது.

நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தில் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக ‘டிரோன்ஸ்’ இருக்கும். எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை நம்பி தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் முதலீடு செய்திருக்கிறார். அவர் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதோடு லாபமும் சம்பாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு ஆதரவு கிடைப்பதைப் போலவே, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்களுக்கும் புதிய முயற்சிகளில் ஈடுபடும் தயாரிப்பாளர்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அதில் ஊடக நண்பர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.
அஞ்சலி நாயருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். ‘டிரோன்ஸ்’ படத்திற்கு உங்கள் ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் டிராவிட் செல்வம் பேசுகையில், “’டியூட்’ படத்தை முடித்திருந்தபோது ‘டிரோன்ஸ்’ படத்தின் கதையைக் கேட்டேன். இதில் இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும், எனக்கு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாகவும் கூறினார்கள். வழக்கமாக நான் செய்யும் நகைச்சுவைப் படைப்புகளிலிருந்து மாறுபட்டு நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஹாரர், நகைச்சுவை எனப் பல அம்சங்களைக் கொண்ட இப்படத்தை ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்க முடியாது. குழந்தைகள் ரசிக்கக்கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை என வித்தியாசமான கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசியல் கருத்துகளையும் இணைத்துப் படமாக்கியிருப்பது சிறப்பான முயற்சி. இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் முதலீடு செய்ய முன்வந்த தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன் மற்றும் இயக்குநர் ராகவ் மிர்தாத் இருவருக்கும் நன்றி.
என்னுடன் நடித்த அனைவரும் சிறப்பானவர்கள். சித்தி இத்னானி எந்தவிதப் பந்தாவும் இல்லாமல் எங்களுடன் நண்பரைப் போலப் பழகினார். அஞ்சலி நாயர் சிறந்த நடிகை. குரேஷி, ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்க சினிமாவாலா சதீஷ் அண்ணன் முக்கியக் காரணம். பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோருக்கும் நன்றி. ‘டியூட்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவைப் போலவே, ‘டிரோன்ஸ்’ படத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். குறைகள் இருந்தால், அடுத்த முறை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்று அறிவுரை கூறுங்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்” என்றார்.
‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் உருவாகியுள்ள இப்படம், மர்மமும் மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் மேட் சயின்டிஸ்ட், துப்பறிவாளர், தேவதை, சூனியக்காரி உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களும் அவற்றைச் சுற்றி நிகழும் மர்மமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஆர். கிஷோர் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். GM Morgan Films நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார்.
ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
