என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வெற்றி.. பரீட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி, இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைத்துள்ளார். கே.வி. கிரண் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். டான் பாஸ்கோ படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய வேலு கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். ரிச்சி ரிச்சர்ட்சன் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகப் பணியாற்றும் ஒரு காவல் அதிகாரி தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், அவை அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள், அந்தச் சூழலிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பவற்றை மையமாகக் கொண்டு இப்படம் விசாரணைத் திரில்லராக உருவாகியுள்ளது.

மேலும், காவல்துறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை இயக்குநரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்.
சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ‘பரீட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பரீட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
