அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற என்ன விலை

Web Ads

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தின் கடலோரப் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கும் ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. நீதிக்கான போராட்டம், கண்ணியம் மற்றும் மன உறுதி உள்ளிட்ட அம்சங்களையும் இப்படம் பேசுகிறது.

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படம் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், இந்த விருது அதன் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் கலாமயா சினிவெர்ஸின் முயற்சிக்கும் இந்த அங்கீகாரம் பெருமை சேர்த்துள்ளது.

Web Ad 2

இந்த விருது குறித்து ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி கூறுகையில், “அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுவது எனக்குப் பெருமையான தருணம். ‘என்ன விலை’ திரைப்படம் அதன் கதைக்களத்துடனும் கதாபாத்திரங்களுடனும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அந்த உலகத்தைக் காட்சிகளாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெரும் பாக்கியம். இந்தப் பெருமையை இயக்குநர் சஜீவ் பாழூர், தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன், அனுகோபால் வேணுகோபாலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களான ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் கூறுகையில், “ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்துள்ள இந்தச் சர்வதேச அங்கீகாரம், ‘என்ன விலை’ படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது. படத்தின் காட்சி மொழிக்கும், படக்குழுவினரின் கூட்டு உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதைப் பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.