சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு!

Web Ads

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும் புரோமோவை வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் நான்கு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் & சில்க்’. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

‘மண்டாடி’ படத்தைத் தொடர்ந்து சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘லப்பர் பந்து’, ‘DC’ படங்களில் நடித்த சஞ்சனா, மூத்த நடிகர் தனிகெல்லா பரணி, நந்து, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார்.

Web Ad 2

வெளியாகியுள்ள டைட்டில் புரோமோ, பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளரின் உலகத்தையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பட்டுப் புடவைக்கும் அதை அணிய வேண்டிய ஒரு பெண் விதிக்கப்பட்டிருக்கிறாள் என்ற கவித்துவமான சிந்தனையை முன்வைக்கும் புரோமோ, இரு வேறுபட்ட உலகங்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பு குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ‘3 BHK’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். ‘அனிமல்’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளராக இணைந்துள்ளார்.

மேலும், ஜஷுவா சண்டைக் காட்சிகளையும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். ஷெரீப் நடன இயக்குநராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். ஒலி வடிவமைப்புப் பணிகளை சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் மேற்கொள்கின்றனர்.

கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் இணைந்து தயாரிக்கும் ‘ஹைட் & சில்க்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் இதர விவரங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.