ஃபேமிலி பாய் படத்தின் அப்பா உன் ஆராரிரோ பாடலை வெளியிட்டசாந்தனு!

Web Ads

அமரர் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நல்லாசியுடன், மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

தந்தையின் அருமை, அன்பு மற்றும் அவரைப் பிரிந்தால் ஏற்படும் ஏக்கம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், தந்தை – மகன் உறவின் ஆழத்தை இசையின் வழியே உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. கேட்போரின் மனதை நெகிழச் செய்யும் மெலடியாக அமைந்துள்ள ‘அப்பா உன் ஆராரிரோ’ பாடல், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகக் கடத்துகிறது.

இப்பாடலுக்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். மித்துன் மாணிக்கம் பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகர் சுந்தரய்யர் மற்றும் வெங்கட்ரமணன் இணைந்து பாடியுள்ளனர்.

மித்துன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Web Ad 2

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்பப் பின்னணியில் ஃபேமிலி டிராமா மற்றும் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP (Millennials Movie Production LLP) நிறுவனம் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடலான ‘அப்பா உன் ஆராரிரோ’ குடும்ப உறவுகளின் மற்றொரு உணர்வுப்பூர்வமான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.

வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்தப் பாடல் மேலும் அதிகரித்துள்ளது.