அயோத்தி ராமர் கோவிலில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கும் அர்ஜூன் படம்

ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா மற்றும் தயாரிப்பாளர் அனுப் மோகன் இணைந்து பிரம்மாண்டமான பான் இந்திய தேசப்பற்று திரைப்படத்தை உருவாக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை விழா அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் நாளை (நவம்பர் 27) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்தியத் திரையுலகில் புதிய திரைப்பட முயற்சியாக உருவாகும் இப்படம், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாகும். இப்படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்குவதுடன், கதையின் நாயகனாகவும் நடிக்கிறார்.
நடிப்பு, இயக்கம் என இரு துறைகளிலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் அர்ஜுன் சர்ஜா, இப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராக களம் இறங்குகிறார். பாலிவுட் மற்றும் பல்வேறு பிராந்தியத் திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் இப்படத்தில் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அனுப் மோகன் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜோஸ் எம். தாமஸ் ராய் செயல் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவன் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, நாளை அயோத்தியில் நடைபெறும் பூஜை விழாவில் வெளியிடப்பட உள்ளது. தேசப்பற்று, வீரம், தியாகம் மற்றும் இந்தியாவின் பெருமையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்படுகிறது.
அயோத்தியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இந்தியத் திரையுலகின் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பெருமையை உலகத் திரையுலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா, அயோத்தியில் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
