பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தீர்ப்பு என்ன?
பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்..
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
பின்னர், மலையாள முன்னணி நடிகர் திலீப் கைதானார். இந்த வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும், விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டது. நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
2017-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இதுவரை 261 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக மலையாள சினிமாவினர் பலரும் துணை நின்று வழக்கிற்கு ஒத்துழைப்பும் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற மே 21ம் தேதி நடைபெறும் என எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில், பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிர்தரப்பினர் தங்கள் வாதங்களை முன்வைக்கும் பட்சத்தில், விசாரணையின் தீர்ப்பு மற்றொரு தேதியில் வழங்கப்படும் என தெரிகிறது.