மே 27 முதல் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய லாங் ஃபார்மட் ஒரிஜினல் தொடரான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ வரும் மே 27 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. ஒவ்வொரு புதன்கிழமையும் புதிய எபிசோடுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உப்பு புளி காரம்’, ‘ஹார்ட்பீட்’, ‘ரிசார்ட்’ போன்ற வெற்றி தொடர்களை தொடர்ந்து, இந்த முறை பொன்மலர் குடும்பத்தின் உணர்வுபூர்வமான மற்றும் நகைச்சுவை நிறைந்த கதையை ஜியோஹாட்ஸ்டார் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது.
இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக ஜவுளி வியாபாரியும் குடும்பத் தலைவருமான சண்முக சுந்தரம் கதாபாத்திரத்தில் போஸ் வெங்கட் நடித்துள்ளார். அவரது மனைவி பொன்மலராக காயத்ரி சாஸ்திரி நடித்திருக்கிறார். இவர்களது நான்கு பிள்ளைகளாக வழக்கறிஞர் நிகிலா, ஐடி ஊழியர் லூதுப், டிஜே கிஷோர் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையாக கனவு காணும் ஷ்வரனிதா ஆகியோரின் வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் அவர்களுக்குள் நடைபெறும் உணர்ச்சி மிக்க தருணங்களே கதையின் கருவாக அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் கலகலப்பாக நகரும் குடும்பக் கதையில், சண்முக சுந்தரத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிறது. இதனால் சிதறப்போகும் குடும்பத்தை காப்பாற்ற சகோதர சகோதரிகள் ஒன்றிணையும் விதமே தொடரின் முக்கிய திருப்பமாக அமைகிறது.
நகைச்சுவை, குடும்ப பாசம், உறவுச் சிக்கல்கள் மற்றும் எமோஷனல் தருணங்கள் கலந்த இந்த தொடரின் புரோமோக்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியான சிறப்பு வீடியோ ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றது.
போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி, ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா மற்றும் ப்ரோமோதினி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரை, ‘உப்பு புளி காரம்’ மற்றும் ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.
அனைத்து தலைமுறையினரையும் கவரும் குடும்ப எண்டர்டெயினராக உருவாகியுள்ள ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர், வரும் மே 27 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
