‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீடு: குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை

Web Ads

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகன், பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு, வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இருவரின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ள நிலையில், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விழாவில் பேசிய நடிகை ரோஜா, இது காதல், குடும்ப பாசம், உறவுகள் மற்றும் உணர்வுகளை சமநிலையுடன் சொல்லும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்றும், குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் அனைவரின் மனதையும் தொடும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் பரிதாபங்கள் கோபி, இயக்குநர் பாரி இளவழகன் மீது இருந்த நம்பிக்கையாலேயே இந்தப் படத்தில் இணைந்ததாகவும், ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்திருப்பதாகவும் கூறினார்.

இசையமைப்பாளர் பரத் சங்கர், பெரம்பூரின் வாழ்க்கை முறையை நேரில் அனுபவித்த பிறகே படத்திற்கு இசையமைத்ததாகவும், படத்தில் இன்னும் பல மனதைத் தொடும் பாடல்கள் ரசிகர்களை காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார், இயக்குநர் பாரி இளவழகனின் படைப்பை பாராட்டியதுடன், ‘அன்பே டயானா’ ரசிகர்களின் மனதை கவரும் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார்.

முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.