சிவகார்த்திகேயன் வரிகளில் ‘வேலும் மயிலும்’ பாடல் வெளியானது!

Web Ads

நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தனது முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடலான ‘வேலும் மயிலும்’ பாடலை வெளியிட்டு, சுயாதீன இசை உலகிலும் புதிய அடியை பதித்துள்ளது.

முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீக பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த இசைப் படைப்பை இயக்கியுள்ளார்.

புதிய கதைகள் மற்றும் திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. அந்த பயணத்தின் தொடர்ச்சியாக தற்போது ‘வேலும் மயிலும்’ என்ற ஆன்மீக இசைப் பாடலை வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் ஆன்மீக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், முருகப் பெருமானின் அருளையும் தெய்வீக மகத்துவத்தையும் இசையின் வழியாக உணர்த்துகிறது. நாட்டுப்புற இசை நுணுக்கங்களும், நவீன இசை வடிவங்களும் இணைந்துள்ள இந்தப் பாடல், பக்தர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் மன அமைதியை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாடலின் சிறப்பம்சமாக, தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோரின் பெயர்களும் முருகப் பெருமானோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘வேலும் மயிலும்’ பாடலின் மூலம் சுயாதீன இசை துறையில் காலடி வைத்துள்ள சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், இனி மேலும் பல தனித்துவமான மற்றும் மனதை வருடும் இசைப் படைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய திறமையாளர்களுக்கு சிறந்த தளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.