மீரா கதிரவன் இயக்கியுள்ள ஹபீபி திரைப்படத்திற்கு யு சான்றிதழ்

குடும்பங்கள் திரையரங்குகளில் கொண்டாடி ரசிக்க இருக்கும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த உணர்வுப்பூர்வமான திரைப்படம், நல்ல கதையம்சத்துடன் குடும்ப பார்வையாளர்களை கவரும் வகையில் தயாராகியுள்ளது. மண் மணம் மிக்க கதையையும், உணர்ச்சிகளைத் தொட்டுச் செல்லும் திரைக்கதையையும் கொண்ட இப்படம், சென்சார் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளதாக சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ரசிகர்களிடம் தரமான படங்களை கொண்டு சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட முன்வந்துள்ளதால், ‘ஹபீபி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதிய திறமையாளர்கள் இணைந்துள்ள இப்படத்தில் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ‘வல்லோனே…’ பாடலில் மறைந்த பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேர்மறையான எதிர்பார்ப்புகளை உருவாக்கி வரும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
