“நம்ம நண்பர் தான்..” – 10 கி.மீ பைக்கில் வழிகாட்டிய நபருக்கு நன்றி தெரிவித்த மம்மூட்டி

Web Ads

விடியற்காலை 3 மணியளவில் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவசரமாக கேரளா திரும்பிக் கொண்டிருந்தார் மெகா ஸ்டார் மம்மூட்டி. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், நிதீஷ் சகதேவ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், மேலாளர் ஜார்ஜ், தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப், நடிகரும் MLA-வுமான ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோருடன் பயணம் மேற்கொண்டார்.

திருப்பத்தூர் அருகே வந்தபோது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததால், கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப்பாதையில் செல்ல முயன்றனர். ஆனால், பலமுறை தவறான வழியை காட்டியதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் சுற்றித் திரிந்தனர்.

இதனால் கடுப்பான மம்மூட்டி, “நாம் மீண்டும் காரைக்குடி ஹோட்டலுக்கே செல்வோம். காலையில் சாலை திறந்ததும் கேரளா செல்லலாம்” எனக் கூறியுள்ளார். இதனால் மறுநாள் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என உடனிருந்தவர்கள் கவலைப்பட்டனர்.

அப்போது பட்டமங்கலம் பகுதியில் பெட்ரோல் பங்கில் இருந்த இளைஞரிடம் கேரளா செல்ல மாற்றுவழி குறித்து கேட்டுள்ளனர். அவர் கூறிய பாதைகளும் ஏற்கனவே அவர்கள் சென்று திரும்பிய வழிகளாகவே இருந்தன.

அந்த நேரத்தில் அங்கு வந்த மற்றொருவர், “நீங்க கேரளாவா?” எனக் கேட்டு காருக்குள் பார்த்துள்ளார். மம்மூட்டியை அடையாளம் கண்டதும் ஆச்சரியமடைந்த அவர், “நீங்க மம்மூட்டி சாரா? வாங்க, என்னை ஃபாலோ பண்ணுங்க” எனக் கூறி தனது பைக்கில் காருக்கு முன்னால் சென்றுள்ளார்.

கூகுள் மேப்புக்கே தெரியாத அந்த வழியில் சுமார் 15 கி.மீ. தூரம் மம்மூட்டியின் காருக்கு வழிகாட்டிய அவர், பின்னர் கேரளா செல்லும் சரியான பாதையை காட்டிவிட்டு விடைபெற தயாரானார்.

Web Ad 2

அப்போது ரமேஷ் பிஷாரடி, “எவ்வளவு நல்ல மனிதர்… நாளைக்கு யாரிடமாவது மம்மூட்டியை பார்த்தேன், அவருக்கு வழிகாட்டினேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மம்மூட்டி உடனடியாக காரிலிருந்து இறங்கி அந்த இளைஞரின் பெயரைக் கேட்டுள்ளார். அவர் தனது பெயர் பாண்டியன் எனக் கூறியதும், அவரது செல்போனை வாங்கிய மம்மூட்டி, ரமேஷ் பிஷாரடியிடம் கொடுத்து புகைப்படம் எடுக்கச் செய்துள்ளார்.

பின்னர் பாண்டியனை அன்புடன் கட்டிப்பிடித்த மம்மூட்டி, “பாண்டியன் இனி என் நண்பர்” எனக் கூறியுள்ளார்.

மம்மூட்டியின் இந்த எளிமையும் அன்பும் பாண்டியனை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எதிர்பாராத நேரத்தில், இந்திய சினிமாவின் முன்னணி நடிகருக்கு வழிகாட்டிய பாண்டியனின் மனிதநேயமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.