இயக்கமா… நடிப்பா? – இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நடிகை மகாலட்சுமி, “இந்தப் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சஞ்சய் மற்றும் லைகா நிறுவனத்திற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் என்ன கதை சொன்னாரோ, அதை அப்படியே படமாக்கியிருக்கிறார். என்னுடைய பணியையும் சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
நடிகர்கள் அன்புதாசன் மற்றும் ஷிவ் பண்டிட் ஆகியோரும் இயக்குநர் சஞ்சய், லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர். நடிகை ஃபரியா அப்துல்லா, “ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தமிழ்குமரன் பேசுகையில், “சஞ்சய் மிகவும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இனி இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு உள்ளது. லைகா மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடன் பயணித்த லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘சிக்மா’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் நடிப்பா, இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் என்னை வாழ்த்தினர்” என தெரிவித்தார்.
