கமல்ஹாசன் மகளாக இருந்தும்…! – ஸ்ருதி ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், ஆரம்பத்தில் கேமராவுக்கு பின்னால் பணியாற்றவும், கதைகள் எழுதவும் தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். தனது தாயாருடன் ஆடை வடிவமைப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தந்தை கமல்ஹாசன் நடித்த ‘ஹேராம்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தற்செயலாக கிடைத்ததாகவும், அந்தப் படத்தின் முதல் காட்சிக்கான உடையை தானே வடிவமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “என் பெற்றோர் இருவரும் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முதன்முதலில் என்னை திரையில் பார்த்தபோது பெரிய மகிழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. ஆனால், எனக்கு இவ்வளவு அங்கீகாரம் கொடுத்த திரைத்துறைக்கும், என் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஏதாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் எனது இரண்டாவது படத்தின் மூலம் உண்மையான திரைப்பயணம் தொடங்கியது” என தெரிவித்துள்ளார்.
70 மற்றும் 80-களில் இருந்த நடிகர்கள் தற்போதைய தலைமுறையை விட சிறப்பாக நடித்ததாகக் குறிப்பிட்ட ஸ்ருதி ஹாசன், மலையாள சினிமா மீதான தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். கேரளாவுக்கு செல்வது மிகப்பெரிய அரண்மனைக்குள் நுழைவது போன்ற உணர்வைத் தருவதாகவும், மலையாள சினிமாவின் தீவிர ரசிகை தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரம்மாண்டம் அல்லது பான்-இந்தியா வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், கதையின் முக்கியமான தருணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை உருவாக்கும் மலையாளத் திரைத்துறையின் அணுகுமுறையை தான் பெரிதும் பாராட்டுவதாகவும், சரியான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மலையாளப் படத்தில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் குறித்தும் தனது கருத்தை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன், இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் திரைத்துறையினருக்கு மட்டுமின்றி, பொதுமக்களின் தனிப்பட்ட சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய தடையாக மாறி வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.
தான் திட்டமிட்டு பன்முகக் கலைஞராக மாறவில்லை என்றும், காலப்போக்கில் அனைத்தும் இயல்பாகவே அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் அரசியல் பயணம் மற்றும் மக்கள் நீதி மய்யம் குறித்து கேட்கப்பட்டபோது, “அப்பாவின் அரசியல் பயணம் குறித்து வெளியாட்கள் போல கருத்து சொல்லும் அளவிற்கு என்னிடம் போதுமான அரசியல் அறிவோ அல்லது பொதுஅறிவுத் தகவல்களோ இல்லை. ஆனால், அப்பாவின் மீதுள்ள அன்பின் காரணமாகவும், ஒரு மகளாக என்னால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் அவரது அரசியல் கட்சிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்தேன்” என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.