கேமரா எல்லாருக்கும் ஒன்றுதான்! – நடிகர் சித்து

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு படங்கள் போட்டியாக வெளியாகியுள்ள நிலையில், இப்படம் 3-வது வாரமாக திரையரங்குகளில் தொடர்ந்து ஓடி வருகிறது.
இதையடுத்து இயக்குநர் பாலாஜியின் சொந்த ஊரான திருநெல்வேலியில் படத்தின் வெற்றி விழா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி, நாகர்கோவில் தினமலர் நிர்வாக இயக்குநர் தினேஷ் மற்றும் வழக்கறிஞர் கமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வெற்றி விழா கேடயங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தினேஷ், இயக்குநர் பாலாஜி தங்களது சொந்த ஊரைச் சேர்ந்த நடிகர்களை வைத்து படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளதாக பாராட்டினார். மேலும், வழக்கமாக சென்னையில் நடைபெறும் வெற்றி விழாவை தனது சொந்த மண்ணான திருநெல்வேலியில் நடத்தியதற்காக பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ஜெயக்குமார் பேசுகையில், படத்தை உருவாக்கும் போது இயக்குநர் பாலாஜி சந்தித்த சிரமங்களையும் போராட்டங்களையும் தான் நேரில் பார்த்ததாக தெரிவித்தார். படக்குழுவில் யாரும் உயர்வு, தாழ்வு என்றில்லாமல் அனைவரும் ஒரே குடும்பமாக பணியாற்றியதாகவும், தயாரிப்பாளரே தேநீர் வாங்கி வரும் அளவிற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.
நடிகை தர்ஷிகா, இந்த வெற்றி விழா ஒரு குடும்ப நிகழ்ச்சி போல் இருப்பதாகக் குறிப்பிட்டார். ‘தி டார்க் ஹெவன்’ தனது முதல் படம் என்றும், அதில் ‘உமையாள்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். பெரிய திரையரங்குகளிலும் படம் வெளியாகி ரசிகர்களை சென்றடைந்ததைப் பார்த்து தயாரிப்பாளர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாயகன் சித்து தனது திரைப்பயணத்தை நினைவுகூர்ந்து பேசினார். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து சாலிகிராமத்தில் சிறிய அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்ததாகவும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் கேமரா அனைவருக்கும் ஒன்றுதான் என்றும் அவர் கூறினார்.

மேலும் இயக்குநர் பாலாஜியைப் பாராட்டிய சித்து, அவர் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றும், கதை எழுதுவது, காட்சிகளை அமைப்பது, இயக்குவது மட்டுமின்றி ஒரு படத்தை ரசிகர்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதிலும் சிறப்பான திட்டமிடல் கொண்டவர் என்றும் தெரிவித்தார். அவருடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தயாரிப்பாளர் கோபால் பேசும்போது, ‘தி டார்க் ஹெவன்’ படத்திற்காக முதலீடு செய்யப்பட்ட தொகையைவிட இதுவரை இருமடங்கு லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் பெரிய வெற்றியையும் லாபத்தையும் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய அவர், இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். முழு வசூல் விவரங்கள் பின்னர் விரிவாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் பாலாஜி பேசுகையில், “2019 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் இன்று தான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியதாகவும், பிரச்சினைகளைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற அறிவுரையை எப்போதும் நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார்.
தனது உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை நினைவுகூர்ந்த பாலாஜி, படத்தில் நடித்த சித்து, ரித்விகா, தர்ஷிகா, ஜெயக்குமார், நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், படத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திறமையான கலைஞர்களும் தொடர்ந்து முயற்சி செய்தால் தங்களுக்கான அடையாளத்தை பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
விழாவின் நிறைவாக படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வெற்றி விழா கேடயங்கள் வழங்கப்பட்டன. படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக கௌரவிக்கப்பட்ட இந்த நிகழ்வு, படக்குழுவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
