எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் – சிக்மா குறித்து ஜேசன் சஞ்சய்!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல்கள்:
‘சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாகவும், அதே நேரத்தில் பதற்றமாகவும் இருப்பதாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘சிக்மா’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் நிறுவனம் விநியோகம் செய்கிறது. ரசிகர்களுக்கு உற்சாகமான, பொழுதுபோக்கு நிறைந்த திரை அனுபவத்தை வழங்கும் நோக்கில் படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநராக தன் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்த அவர், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள தமிழ்குமரனுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மீதும் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து அர்ப்பணிப்புடன் நடித்த சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத், ராஜு மாஸ்டர் உள்ளிட்ட நடிகர்களுக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் உடன் பணியாற்றியது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்ட ஜேசன் சஞ்சய், அவரது காட்சிப் பார்வையும் புரிதலும் படத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியதாக தெரிவித்துள்ளார். அதேபோல், அனுபவம் வாய்ந்த எடிட்டர் பிரவீன் கே.எல். படத்தில் இணைந்தது மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தமனின் இசையும், அதிரடியான பீட்களும் படத்திற்கு கூடுதல் உற்சாகத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுப்ரமணியன் நாராயணன், கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சீவ் ஆகியோரின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு வெங்கட் மற்றும் சில்வா சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும், படத்தின் மையக் கதைக்களத்திற்கு அவர்கள் கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் அதன் தோற்றம் மற்றும் உணர்வுக்கு ஏற்ற வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சினிமா என்பது பொழுதுபோக்குக்கான ஊடகம் என்ற அடிப்படையில், ‘சிக்மா’வை சுவாரஸ்யமான மற்றும் விறுவிறுப்பான திரைப்பட அனுபவமாக உருவாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாகவும், மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து பல்வேறு ரசிகர்களை சென்றடையும் படமாக உருவாக்க முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஒரு படைப்பின் மீதான நம்பிக்கை எப்போதும் பணிவுடன் இணைந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையுடனும் பணிவுடனும் அக்டோபர் 2-ம் தேதி ‘சிக்மா’ திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு எங்களுடன் இந்தப் பயணத்தை அனுபவிக்குமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மேலும், சினிமா எனும் பிரம்மாண்டமான துறையில் ஒரு அறிமுக இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்குவதாகவும், இந்தப் பயணத்தில் ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பும் தனக்கு மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ள அவர், ‘சிக்மா’ திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
