மணிகண்டனின் மக்கள் காவலன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படமாக ‘மக்கள் காவலன்’ உருவாகியுள்ளது. லட்சியம், மன உறுதி, தடைகளைத் தாண்டி முன்னேறும் துணிச்சல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கே. மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் முதன்முறையாக முழுமையான அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் கதாநாயகனாக களமிறங்குகிறார்.
இப்படத்தை இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதன், தனது உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் இருந்து மக்களின் காவலனாக மாறும் பயணமே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. தன்னைச் சுற்றியுள்ள தடைகள் தனது லட்சியத்தை தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் விடாமுயற்சியையும், போராட்டத்தையும் இப்படம் பேசுகிறது.

எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பது என தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ள மணிகண்டனின் பயணத்தையும் இப்படத்தின் மையக்கருத்து பிரதிபலிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘மக்கள் காவலன்’ படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்ய, ‘பைசன் காளமாடன்’ படத்திற்குப் பிறகு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். அருள் மோசஸ் படத்தொகுப்பு பணிகளையும், பாப்பநாடு சி. உதயகுமார் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். டான் அசோக் சண்டைப் பயிற்சியையும், ஆண்டனி ஜெயரூபன் ஒலி வடிவமைப்பையும், சுரேஷ்குமார் ஆடை வடிவமைப்பையும், ராமச்சந்திரன் ஒப்பனையையும் மேற்கொண்டுள்ளனர்.
கே. மணிகண்டனின் பிறந்த நாளில் வெளியான இந்த அறிவிப்புடன், ‘மக்கள் காவலன்’ திரைப்படம் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
