மரகத நாணயம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Web Ads

பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் மீண்டும் இணைந்துள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதையுடன் வெளியாகும் திரைப்படங்கள், பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், 2017ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான முதல் பாகம் வெற்றிப் பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ‘மரகத நாணயம் 2’ அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவன், இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Web Ad 2

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.