‘லப்பர் பந்து’ புரிந்த செம சாதனை: படக்குழுவினர் கொண்டாட்டம்..
குறைவான முதலீட்டில், தரமான படமாக உருவானதால், லப்பர் பந்து, செம கலெக்ஷனுடன் ஓடிடியிலும் சிக்ஸர் அடித்திருக்கிறது. இத்தகு சாதனைக்களம் குறித்து பார்க்கலாம் வாங்க..
தியேட்டர்களிலும் வெற்றி நடைபோட்டு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் படங்களில், லப்பர் பந்து குறிப்பிடத்தக்கது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வந்த படம் லப்பர் பந்து.
முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையப்படுத்திய இந்தப் படம் குறைவான தியேட்டர்களில் வெளியானது. முதல் நாளில் மட்டும் இந்தப் படம் ரூ.75 லட்சம் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளில் ரூ.1.5 கோடியாக உயர்ந்தது. இதே போன்று 3ஆவது நாளில் ரூ.2 கோடி அதிகரித்தது.
இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 50 நாட்கள் ஆன நிலையில், இன்னும் சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தியேட்டரை தாண்டி, ஓடிடியில் இந்தப் படம் வெளியானது. அப்படியிருந்தும் தியேட்டர்களில் ஓடுவது என்பது அந்தப் படம் குவித்த சாதனை தான்.
ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.42.50 கோடி வரையில் வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் இதைவிட அதிக வசூல் செய்த படங்கள் இந்த ஆண்டு பத்துக்கும் மேல் இருந்தாலும், தயாரிப்பாளருக்கு அதிக லாபம் ஈட்டித் தந்த படம் வேறு எதுவும் இல்லை.
இதன் மூலமாக, இந்த 2024ஆம் ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் அதிக லாபத்தை ஈட்டி தந்த படங்களில் பட்டியலில் ‘லப்பர் பந்து’ முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டியும், நினைவுப் பரிசு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இதே படக்குழு மீண்டும் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தொடரட்டுமே வெற்றி..!