சூர்யா படத்துக்கு போட்டியாக தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா படத்துடன் தனுஷ் படம் மோத இருப்பது, இரு படங்களுக்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இது குறித்த விவரம் காண்போம்..
பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வெற்றிப்பயணம் செய்கிறார். பவர் பாண்டி படத்திற்கு பிறகு, ராயன் படமும் இயக்கி வாகை சூடியிருக்கிறார். இப்படம், கடந்த ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் ஹிட் அடித்தது மட்டுமின்றி ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது
இதனைத் தொடர்ந்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார்.
தன்னுடைய ஒண்டர்பார் நிறுவனம் மூலம் தனுஷே தயாரித்தும் உள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இட்லி கடை என்கிற படத்தை தற்போது இயக்கி வரும் தனுஷ், அதில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் தனுஷ்.
அதன்படி, இட்லி கடை திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவனேசன் என்கிற கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது.
இப்படத்துக்கு போட்டியாக ஏப்ரல் 10-ந் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 44 படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுவதால், அடுத்த ஆண்டு இரு படங்களுக்கும் செம மோதல் இருக்கும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பார்க்கலாம் எப்டின்னு.!