ஜூன் திரைக்கு வரும் ஹாரர் திரில்லர் ‘டார்க் ஜெயிண்ட்’!

Web Ads

உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘டார்க் ஜெயிண்ட்’ வரும் ஜூன் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹரி உத்ரா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிராமத்தில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்த திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயோவன் கிரியேஷனிசம் நிறுவனத்தின் சார்பில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன், அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களுக்கு கங்கை அமரன் வரிகள் எழுதியுள்ள நிலையில், விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் கே.எஸ். கிஷன் கூறுகையில், “ஹாரர் திரைப்படம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது, அதைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள பல ஊர்களுக்கு சென்று ஆராய்ச்சி மேற்கொண்டேன். அந்த பயணத்தில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களையும், மனிதர்களின் அனுபவங்களையும் அறிந்து கொண்டேன். உலகத்தின் மறுபக்கத்தைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அந்த அனுபவங்களை அப்படியே திரையில் சொல்ல முடியாத சூழல் இருந்ததால், அவற்றில் இருந்து ஒரு சிறிய கருவை மட்டும் எடுத்து ‘டார்க் ஜெயிண்ட்’ திரைப்படமாக உருவாக்கியுள்ளேன். இன்னும் பல சொல்லப்படாத, மறைக்கப்பட்ட விஷயங்கள் இந்த உலகத்தில் உள்ளன. ஜூன் 11ஆம் தேதி படம் வெளியாகும் போது, ரசிகர்களுக்கு ஒரு தரமான ஹாரர் அனுபவம் கிடைக்கும்” என்றார்.

ஹாரர் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘டார்க் ஜெயிண்ட்’, திரையரங்குகளில் திகில் விருந்தளிக்க தயாராக உள்ளது.