மூடர் கூடம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

Web Ads

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பும் ‘மூடர் கூடம்’… ‘மிஷன் பாசிபிள்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற ‘மூடர் கூடம்’ திரைப்படம், 13 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ என்ற பெயரில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத், இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இது வெறும் தொடர்ச்சிப் படமாக இல்லாமல், டார்க் காமெடி, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் முற்றிலும் புதிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.

வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பனிப்பிரதேசத்தில் ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு கதாபாத்திரங்கள் மற்றும் கையில் துப்பாக்கியுடன் ‘Happy Life’ என்ற வாசகத்துடன் இருக்கும் டெடி பேர் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், ‘Mission: Possible’ என்ற சப்டைட்டிலும் படத்தின் தனித்துவமான நகைச்சுவை பாணியை வெளிப்படுத்துகிறது.

இந்தப் படம் இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்க விஎஃப்எக்ஸ் குழுவினர் படத்தின் காட்சியமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதால், சர்வதேச தரத்தில் திரையரங்கு அனுபவம் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Web Ad 2

இப்படம் குறித்து இயக்குநர் நவீன் ஹிதயத் கூறுகையில், “‘மூடர் கூடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். வெறும் சீக்வலுக்காக இந்தப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் கதையாகவே ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தின் நகைச்சுவையையும் தனித்துவத்தையும் தக்கவைத்துக்கொண்டு, இன்னும் பெரிய அளவில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்,” என்றார்.

தயாரிப்பாளர்களான கமல் போஹ்ரா மற்றும் சம்கித் போஹ்ரா கூறுகையில், “கல்ட் கிளாசிக் படத்தின் தொடர்ச்சியை உருவாக்குவது மிகப்பெரிய பொறுப்பு. இந்தப் படம் ரசிகர்கள் விரும்பிய உலகத்தை இன்னும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ விறுவிறுப்பும், நகைச்சுவையும், புதுமையும் நிறைந்த திரையரங்கு அனுபவமாக இருக்கும்,” என்றனர்.

இப்படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ள நிலையில், அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை நடராஜன் சங்கரன், படத்தொகுப்பை அதியப்பன் சிவா, ஒலியமைப்பை விஜய் ரத்தினம் MPSE கவனித்துள்ளனர். சர்வதேச விஎஃப்எக்ஸ் பணிகளை கே.ஏ. பாட்சா தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது.

கிராண்டல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’, முதல் பாகத்தைப் போலவே ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ஏற்படுத்தியுள்ளது.