மணிகண்டன் போலீஸாக நடிக்கும் மக்கள் காவலன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Web Ads

‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படமாக ‘மக்கள் காவலன்’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் டிராமா பாணியில் உருவாகும் இப்படம், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும், சமூக அக்கறை கொண்ட வலுவான கதையையும் இணைக்கும் முயற்சியாக உருவாகிறது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் கே. மணிகண்டன் தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இப்படம், கண்ணியமாக வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்கொள்ளும் சூழ்நிலையை மையமாகக் கொண்டுள்ளது. உயிர்வாழ்வுக்கான அவரது போராட்டம், காலப்போக்கில் மக்களின் தலைவராக அவர் உருவெடுக்கும் பயணமாக மாறுகிறது.

படத்தில் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பிரதீபன் செல்வரத்தினம் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா இணைந்துள்ளார்.

Web Ad 2

பிர்லா ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி கூறுகையில், “‘பைசன் காளமாடன்’ வெற்றிக்குப் பிறகு ‘மக்கள் காவலன்’ மூலம் நீலம் ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. வலுவான கதைகளையும் திறமையான படைப்பாளிகளையும் தொடர்ந்து ஆதரிக்க விரும்புகிறோம். சந்தோஷ் குமார் தனது முதல் முழுநீள படத்திலேயே தனித்துவமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். மணிகண்டன் போன்ற திறமையான நடிகருடன் இந்தப் பயணம் அமைந்தது பெருமை,” என்றார்.

நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறுகையில், “‘மக்கள் காவலன்’ மூலம் திறமையான இளம் இயக்குநர் சந்தோஷ் குமாரை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. மணிகண்டனின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். இயக்குநர்களின் பார்வையை முன்னிறுத்தும் படங்களை ஆதரிக்கும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றனர்.

நடிகர் கே. மணிகண்டன் கூறுகையில், “‘மக்கள் காவலன்’ கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான ஆக்‌ஷன் டிராமா. கதையின் புதுமையும் நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. விறுவிறுப்பும் தீவிரமும் நிறைந்த இந்தக் கதை இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமானது. இயக்குநர் சந்தோஷ் இந்தக் கதையை சொன்னவுடன் நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவுப் படம்,” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் கூறுகையில், “‘மக்கள் காவலன்’ என் முதல் முழுநீள திரைப்படம். நான் சந்தித்த மனிதர்களும், வாழ்ந்த அனுபவங்களும், நேரில் கண்ட உண்மைகளும் இந்தக் கதைக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. அதிகார அமைப்புகளுக்குள் நிலவும் சமத்துவமின்மையையும், அந்தச் சூழலில் நேர்மையை காக்கப் போராடும் ஒரு மனிதனின் கதையையும் இந்தப் படம் பேசுகிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை மணிகண்டன் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். என் முதல் படத்தை நம்பி வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸுக்கு மனமார்ந்த நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.