மீண்டும் படம் தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா: ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இயக்குகிறார்

தமிழ் திரையுலகில் புதுமையான முயற்சிகளையும், வித்தியாசமான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைக் கடந்து தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
33 ஆண்டுகளாக கலை இயக்குநராகப் பணியாற்றி வரும் டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் புதிய திரைப்படம், ‘ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம்’ (Hyper-Realistic Digital Hybrid Feature Film) என்ற புதிய தொழில்நுட்ப அணுகுமுறையில் உருவாகி வருகிறது. மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான காட்சியமைப்பு முறைகளை இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
டி. முத்துராஜுடன் கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வரும் ஆர்.டி. ராஜா, அவரது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். விளம்பரத் துறை, ஆக்கப்பூர்வமான கலைப் பணிகள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘மந்திரா ஸ்டுடியோஸ்’ வெறும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக மட்டுமின்றி, புதிய சிந்தனைகள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் படைப்புத் தளமாக செயல்படும் என ஆர்.டி. ராஜா தெரிவித்துள்ளார். இதுவரை சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்து, புதிய காட்சியுலகை உருவாக்குவது நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சிந்தனை சவாலானதாக இருந்தாலும், அதைத் தொடக்கத்திலேயே சாத்தியமற்றது என நிராகரிக்காமல் முயற்சியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதே இந்த முயற்சியின் அடிப்படை நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கதைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் எல்லைகளைக் கடக்கும் கற்பனையின் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டி. முத்துராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழில்நுட்பம், புதுமையான கதை சொல்லல் மற்றும் புதிய காட்சியமைப்பு என மாறுபட்ட முயற்சிகளுடன் உருவாகி வரும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’, தமிழ் சினிமாவில் புதிய படைப்புகளுக்கான தளமாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
