வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் ‘ருத்ரா’ தோற்றம் வெளியீடு!

Web Ads

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘வாரணாசி’ திரைப்படத்தின் படக்குழு, மகேஷ் பாபு நடிக்கும் ‘ருத்ரா’ கதாபாத்திரத்தின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

முதல் புகைப்படத்தில் அடர்ந்த வனப்பகுதியில் மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை கம்பீரமான தோற்றத்தில் காண முடிகிறது. மற்றொரு புகைப்படத்தில் கென்யாவின் மாசாய் மாரா சமவெளியில் ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் விலங்குகளுக்கு மத்தியில் ருத்ரா அதிகார தோரணையில் காட்சியளிக்கிறார்.

உலகம் முழுவதும் பயணிக்கும் நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாக ‘வாரணாசி’ உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியாவின் புனித நீர்நிலைகளில் இருந்து ஆப்பிரிக்காவின் அடர்ந்த வனப்பகுதிகள் வரை பயணிக்கும் ஒரு மனிதனின் அசாதாரணமான கதையாக இப்படம் உருவாகிறது.

ருத்ரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கூறுகையில், “தன்னைவிட பெரிய நோக்கத்திற்காக பிறந்தவன் ருத்ரா. ஒரே நேரத்தில் நகைச்சுவை உணர்வும், மென்மையும், கடுமையும் கொண்ட கதாபாத்திரம். அந்த அனைத்து பரிமாணங்களையும் மகேஷ் பாபு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Web Ad 2

ஆப்பிரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா பகுதிகளின் இயற்கை அழகு தன்னை வியக்க வைத்ததாகவும் ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் எம்.எம். கீரவாணி இசையமைக்கும் ‘வாரணாசி’ திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படம் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.